மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஒத்தக்கடையில் உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-03 22:45 GMT
தரகம்பட்டி,

கடவூர் ஒன்றியம், வாழ்வார்மங்கலம் ஊராட்சியில், வாழ்வார்மங்கலம், ஒத்தக்கடை, அண்ணாநகர், கன்னிமார்பாளையம், பெரியகோடங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒத்தக்கடையில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது 12 மணிக்கு மதுபானக்கடை திறக்கப்படுவதால், அதற்கு முன்னதாக சந்துக்கடைகள் மூலம் சிலர் மதுபானம் விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒத்தக்கடையில் உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரியும், சந்துகடைகளில் மதுபானம் விற்பனை செய் பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஒத்தக்கடையில் திருச்சி- பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முதல்கட்டமாக சந்துக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒத்தக்கடையில் உள்ள மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- பாளையம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்