மேலும் ஒரு வழக்கில் சேலம் மாணவி கைது போலீசார் நடவடிக்கை

சேலத்தில் குண்டர் சட்டம் பாய்ந்த மாணவி வளர்மதியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து உள்ளனர்.;

Update: 2017-08-03 23:15 GMT
சேலம்,

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் வளர்மதி (வயது 23). கடந்த மாதம் 12-ந்தேதி வளர்மதி சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் வளர்மதியை கைது செய்து கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

கைதான வளர்மதி மீது அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக கரூர் மாவட்டம் குளித்தலை, கோவை, சிதம்பரம், சேலம் பள்ளப்பட்டி, சேலம் டவுன் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் அரிசிபாளையம் பாவேந்தர் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய நபரை விடுவிப்பது தொடர்பாகவும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வளர்மதி உள்பட பலர் சேலம் 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வளர்மதி மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது பள்ளப்பட்டி போலீசார் சாலைமறியல் தொடர்பான வழக்கில் வளர்மதியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்