கோவில்பட்டியில், ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2017-08-03 21:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

வாலிபர் பிணம்

கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் நேற்று காலையில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன், ஏட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபரின் பையில் இருந்த வாகன ஓட்டுனர் உரிமத்தின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரெயில் மோதி இறந்தவர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலாந்துலா நடு தெருவைச் சேர்ந்த ஆழ்வார்சாமி மகன் ராகுல்ராஜ் (வயது 20) என்பது தெரிய வந்தது.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

ராகுல்ராஜ், நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 1–ந்தேதி கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற

அவர் விடுதிக்கு திரும்பி வரவில்லை என்பது தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர், தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக கோவில்பட்டிக்கு வந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்