பொது கட்டிடங்களுக்கு உரிமம் பெறவில்லை என்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது கட்டிடங்களுக்கு உரிமம் பெறவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு பொது கட்டிடங்கள் சட்டம் 1965–ன்படி பொது கட்டிடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமம் பெற வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள், நூலகங்கள், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள், கிளப்புகள், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், திருமண மண்டபங்கள், சங்க கட்டிடங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், வணிக வளாகம், சமுதாய நலக்கூடங்கள், விருந்து நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டிடங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் மத ரீதியான வழிபாட்டு மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து வகையான கட்டிடங்கள் பொது கட்டிடங்களாக கருதப்படும்.
உரிமம் பெற வேண்டும்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாத பொது கட்டிடங்களின் உரிமையாளர்கள், குத்தகைதாரர், மேலாளர், முதல்வர், செயலாளர் என கட்டிடத்திற்கு பொறுப்பானவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற என்ஜினீயரிடம் பெறப்பட்ட கட்டிட உறுதிதன்மைகளான ஏ, பி மற்றும் சி சான்று, அங்கீகரிப்பட்ட கட்டிட வரைபடம், கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெற்ற ஆணை நகல், உள்ளாட்சி நிர்வாகத்திடம் வரி செலுத்தியதற்கான ரசீது, தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று, சுகாதாரத்துறை சான்று போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் விண்ணப்பித்து உரிய கட்டணத்தை செலுத்தி வருகிற 11–ந்தேதிக்குள் விண்ணப்பித்து டி படிவ உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் கட்டிட உரிம சான்றை புதுப்பிக்க மனு அளித்து அதனை புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும். உரிய உரிமம் பெறாமல் எந்த கட்டிடத்தையும் பொது கட்டிடமாக பயன்படுத்தக்கூடாது, உரிமம் பெறாமலோ, காலாவதியான உரிமத்துடனோ பொது கட்டிடங்கள் இருந்தால் அந்த கட்டிடம் தடை செய்யப்படுவதோடு அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.