கோவையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

கோவையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2017-08-03 14:00 GMT
கோவை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தலைமையிலான குழுவினர் நேற்று கோவை வந்தனர். அவர்கள் கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, ஆவின் பாலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் நின்ற ஒரு பஸ்சில் ஏறி அனைவரும் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள், கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கூட்டரங்கில் உள்ள வேளாண்மை துறை, தாட்கோ, போக்குவரத்து துறை மற்றும் தொழில்துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

பின்னர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் அங்குள்ள உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? போதுமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 25 டிரைவர்கள் விபத்து இல்லாமல் பஸ்களை ஓட்டியதாகவும், விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

25 ஆண்டுகள் விபத்துகளே இல்லாமல் பஸ்களை ஓட்டுகிற டிரைவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் பஸ்களை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக இயக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் அவர்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.

கூடுதல் பஸ்கள் வேண்டுமா என்று கேட்டதற்கு போதுமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்கள். எந்த பஸ்களிலுமே ஓட்டைகள் இல்லை. கரும்புகையை ஏற்படுத்தி, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த பஸ்களை இயக்க தடை விதிக்கப்படும்.

கோவை அருகே உள்ள பச்சாப்பாளையம் ஆவின் பால் நிறுவனத்துக்கு சென்று ஆய்வு செய்தோம். அங்கு ஒரு நாளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் லிட்டர் பால் கேரளாவுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

மீதமுள்ள பாலில் பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பொருட்கள் ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஆய்வு செய்தது மனநிறைவை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் ஹரிகரன், தமிழநாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏ.ரத்தினசபாபதி, ஐ.பி.செந்தில்குமார், கோவி.செழியன், ச.வெற்றிவேல், என்.ஜி.பார்த்திபன், கு.பிச்சாண்டி, அ.பிரபு, கே.ஏ.எம். அபுபக்கர், மற்றும் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் கருணாகரன், கோவையை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், நா.கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண் இயக்குனர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டியன், பொதுமேலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்