தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரம் சாலை மேம்பாட்டு கழக அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும்
தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரத்தில் ஈடுபட்ட சாலை மேம்பாட்டு கழக துணை தலைவர் ராதேஷ்யாம் மோபால்வரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்
மும்பை,
தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரத்தில் ஈடுபட்ட சாலை மேம்பாட்டு கழக துணை தலைவர் ராதேஷ்யாம் மோபால்வரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர்.
ரூ.1 கோடி பேரம்மாநில சாலை மேம்பாட்டு கழக துணை தலைவர் ராதேஷ்யாம் மோபால்வர். இவர் மும்பை போரிவிலியில் உள்ள 15 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1 கோடி வரை பேரம் பேசியதாகவும், இது தொடர்பாக இவருக்கும், தொழில் அதிபருக்கும் இடையே தொலைபேசியில் உரையாடல் நடைபெற்றதாகவும் செய்தி சேனல்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பிரச்சினை நேற்று மராட்டிய சட்டசபையில் பூதாகரமாக வெடித்தது. மேல்–சபை கூடியதும் ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் இந்த பிரச்சினையை கையில் எடுத்த எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, ‘‘நில பேரத்துக்காக ராதேஷ்யாம் மோபால்வர் 550 தடவை தொழில் அதிபருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இந்த அழைப்பு விவரங்கள் தடயவியல் சோதனைக்காக சென்றிருந்தாலும், அதில் பேசிய நபர் ராதேஷ்யாம் மோபால்வர் என்பது தெளிவாகிறது’’ என்றார்.
பணிநீக்கம்அத்துடன், ஐ.பி.எஸ். அதிகாரியான ராதேஷ்யாம் மோபால்வர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதால், அவரை மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்ட பொறுப்பாளராக நியமிக்க கூடாது என்றும், அவரை உடனடியாக பணிநீக்கம் செய்து அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனஞ்செய் முண்டே வலியுறுத்தினார்.
காங்கிரஸ் உறுப்பினர் சரத் ரன்பிசே கூறும்போது, ‘‘கடந்த 3 ஆண்டுகளில் அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழல் நடைபெறும்போது எல்லாம், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கோரி மந்திராலயாவுக்கு பணம் அனுப்பப்படுகிறது’’ என்றார்.
தேவேந்திர பட்னாவிஸ் பதில்எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்து பேசியதாவது:–
ராதேஷ்யாம் மோபால்வர் வகிக்கும் முக்கிய பதவிகள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அவருக்கு வழங்கப்பட்டவை. செய்தி சேனல்களில் வெளியான அந்த தொலைபேசி உரையாடலை நானும் கேட்டேன்.
அந்த உரையாடல் உறுதிப்படுத்தப்படாதது என்று செய்தி சேனல்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த குற்றச்சாட்டு குறித்து ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிவு எடுப்போம். ராதேஷ்யாம் மோபால்வர் தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
பிரகாஷ் மேத்தா பதவிக்கு ஆபத்துஇதேபோல், சட்டசபையிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. விசாரணை முடியும் வரையில், ராதேஷ்யாம் மோபால்வருக்கு எந்தவொரு பொறுப்பும் ஒதுக்க கூடாது என்று முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு நில முறைகேடு புகார் காரணமாக அப்போதைய வருவாய்த்துறை மந்திரி ஏக்நாத் கட்சே பதவி விலகினார். இதே அளவீடு தான், தற்போது நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் மேத்தாவுக்கும் பொருந்தும். ஆகையால், அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இவ்வாறாக இந்த பிரச்சினை மீது நேற்று சட்டசபையில் அனல்பறக்க விவாதம் அரங்கேறியது.