காஞ்சீபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

Update: 2017-08-02 22:15 GMT
வண்டலூர், 

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை சிறு தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் விழா நடைபெறும் இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை தொடங்கிவைத்தார். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் பென்ஜமின் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 30-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள், வருகிற 7-ந்தேதி விழாவிற்காக பந்தல் அமைப்பதற்காக கால்கோள் விழா நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், காஞ்சீபுரம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலகுமார், ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, நகர செயலாளர் டி.சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்