அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-08-02 23:00 GMT

புதுச்சேரி,

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ரூ.4 உயர்த்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் ரத்து செய்யப்போவதாகவும் பாராளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் புதுவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகே, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலையரசி, இளவரசி, தெய்வானை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து அடுப்பு பற்ற வைத்து சமையல் செய்தனர். அப்போது பெண்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்