தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை உயராதது ஏன்? தேசிய சுகாதார திட்ட இயக்குனர் விளக்கம்
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை உயராதது குறித்து தேசிய சுகாதார குழும திட்ட இயக்குனர் டாரிஸ் அகமத் விளக்கம் அளித்தார்.
சென்னை,
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு 1-ந் தேதி (நேற்று முன்தினம்) முதல் 7-ந் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ‘தாய்ப்பாலூட்டுதலை ஒருங்கிணைந்து தக்கவைப்போம்’ என்ற மைய கருத்தை வலியுறுத்த உள்ளனர். இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மகப்பேறு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாரிஸ் அகமத், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, உலக குழந்தைகள் நல நிதி நிறுவன தலைவர் ஜோப் சக்காரியா, சுகாதார நிபுணர் டாக்டர் ஜெகதீசன், தேசிய பச்சிளம் குழந்தை நிபுணர்கள் குழும தலைவர் குமுதா உள்பட சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கு பெற்ற பச்சிளம் குழந்தை வைத்திருந்த தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக பேசிய பலர், தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினர். இதுகுறித்து தேசிய பச்சிளம் குழந்தை நிபுணர்கள் குழும தலைவர் குமுதா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதால் சீம்பால் கிடைக்கிறது. இதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. 6 மாதம் வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இப்படி 6 மாதம் வரை 48 சதவீத தாய்மார்கள் தான் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். 99.8 சதவீதம் குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறக்கின்றன. எனவே அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுக்க டாக்டர்கள், செவிலியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர், உலக குழந்தைகள் நல நிதி நிறுவன தலைவர் ஜோப் சக்காரியா பேசும்போது, ‘ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பால் வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அப்படி நடத்தினாலும், கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் 55 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். இந்த சதவீதம் இதுவரை உயரவில்லை’ என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாரிஸ் அகமத், ‘தமிழ்நாட்டில் 100 சதவீத தாய்மார்களில் 45 சதவீதம் பேர் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை பெற்று எடுக்கிறார்கள். அப்படி அவர்கள் பெற்று எடுக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் இருந்து சாதாரண வார்டுக்கு கொண்டு வந்து நல்ல நிலைக்கு திரும்பியதும் தான் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க அனுமதிக்கிறார்கள். இதனால் தான் அந்த சதவீதம் உயரவில்லை. அறுவை சிகிச்சை மூலம் தான் கட்டாயம் குழந்தையை பெற்று எடுக்க முடியும் என்று இருந்தால் மட்டுமே தாய்மார்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும்’ என்றார்.