கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண் தொழிலாளர்கள் சாவு

கடத்தூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-08-02 23:15 GMT
பொம்மிடி,

கடத்தூர் அருகே உள்ள நல்ல குட்ல அள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான டிராக்டரில் புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த சரவணன்(வயது 38) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை விவசாய பணிகளுக்கு தேவையான பொருட்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு போசிநாயக்கனஅள்ளியில் இருந்து புறப்பட்டார்.

இந்த டிராக்டரில் நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த காசி என்பவரின் மனைவி வள்ளி(26), மாது என்பவரின் மனைவி சரோஜா(50) ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி இறக்க சென்றனர். அப்போது வள்ளிக்கு டிராக்டர் ஓட்ட கற்றுக்கொடுக்க முடிவு செய்த சரவணன், டிரைவர் சீட்டில் வள்ளியை அமர்த்தி டிராக்டரை இயக்கும் முறை குறித்து பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

போசிநாயக்கனஅள்ளி -கடத்தூர் சாலையில் உள்ள கோழிப்பண்ணை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 45 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்தது. அப்போது சரவணன் டிராக்டரில் இருந்து எகிறி குதித்து உயிர் தப்பினார்.

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்த வள்ளி, சரோஜா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளி, சரோஜா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த வள்ளிக்கு 2 பெண்குழந்தைகளும், சரோஜாவிற்கு ஒரு மகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்