காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
காங்கேயத்தில் உள்ள பணிமனையில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் சுமார் 3 மணி நேரம் பஸ்கள் வெளியேற முடியவில்லை.
காங்கேயம்,
காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பணிமனையில் டவுன் பஸ்கள் மற்றும் வெளியூர் பஸ்கள் என சுமார் 97 பஸ்கள் தினசரி இயக்கப்படுகிறது. இந்த பணிமனையில் ஏராளமான ஓட்டுனர், நடத்துனர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைபார்க்கிறார்கள்.
கிளைமேலாளர் இங்குள்ள தொழிலாளர்களை சரியாக நடத்துவதில்லை என்றும், தொழிலாளர்களின் அவசர தேவைக்கு கூட விடுமுறை கொடுப்பதில்லை என்றும், அப்படியே விடுமுறை அளித்தாலும் அந்த நாளை ஆப்சென்ட் போட்டு சம்பளம் கொடுப்பதில்லை. தொடர்ந்து இவ்வாறு பல மாதங்களாக கிளை மேலாளர் தொழிலாளர் விரோத போக்கை கையாண்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே, கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக அவரை பணியிடம் மாற்றம் செய்யவேண்டும் எனவும் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
வழக்கமாக அதிகாலை 3 மணிமுதல் இந்த பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று இந்த டெப்போவில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை. இங்கு பணிபுரியும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் பணிமனையின் கேட்டை வழிமறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். காலை 4 மணிமுதல் நடந்த இந்த போராட்டத்தின்போது திருப்பூர் கிளை பொது மேலாளர் சேனாதிபதி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லும்படியும், சம்பந்தப்பட்ட கிளைமேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு காலை 7 மணிக்கு பணிமனையில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் காலை 4 மணிமுதல் 7 மணிவரை 3 மணிநேரம் பஸ்கள் பணிமனையில் வெளியேற முடியவில்லை.