அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி வாகன பிரசார பயணத்தை 13–ந்தேதி அன்புமணி ராமதாஸ் காரமடையில் தொடங்குகிறார்
அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13–ந்தேதி வாகன பிரசார பயணத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் காரமடையில் தொடங்குகிறார் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
சிறுபான்மை பிரிவு தலைவர் மன்சூர், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் காசி, நகர செயலாளர் மணிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் இதை வலியுறுத்த வேண்டும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 35 லட்சம் பொதுமக்களும், 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலமும் பயன்பெறுவதற்குரிய அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13–ந்தேதி பா.ம.க. சார்பில் வாகன பிரசார பயணம் தொடங்க உள்ளது. கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து தொடங்கும் இந்த பயணம், திருப்பூர் வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சென்றடையும். இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வாகன பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறார். திட்டத்தை நிறைவேற்ற தற்போது அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
சேலம் இரும்பு உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசு வழங்கும் கியாஸ் மானிய திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. விலை உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்படும் என்று கூறுவது வேதனைக்குரிய விஷயமாகும். பிளஸ்–2 தேர்வை எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. இது ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது. இதனால் தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக பாடத்திட்டத்தில் மாறுதல்களை கொண்டு வரவேண்டும். தமிழக கல்வி தரமானதாக இல்லை.
ஜி.எஸ்.டி. மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில்கள் நலிவடைந்துள்ளன. இந்த வரிவிதிப்பு வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பளிப்பதாகவே உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். டெல்டா பகுதியில் நிலம் கையகப்பத்தி தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். இதற்காக வருகிற 5–ந்தேதி அந்த பகுதி பொதுமக்களை சந்திக்க உள்ளோம். ஊட்டியில் தேயிலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டங்களுக்கு தீர்வு காணவேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடுகளை களைய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவர்களின் விருப்பம். ஆனால் நடிகர்கள் மட்டுமே அரசியலுக்கு வருவதை ஏற்று கொள்ள முடியாது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த கட்சி பல அணிகளாக உடைந்து வருகிறது. இதன் முடிவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.