நிலத்துக்கு ஏற்ப தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் கோரிக்கை

நிலத்துக்கு ஏற்ப தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-08-02 23:00 GMT

கோவை,

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக விமான நிலையம் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, பாரதிநகர், காந்தி நகர், சின்னியம் பாளையம், ஆர்.ஜி.புதூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்தப்பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்கேயே குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் மறுப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவை பீளமேட்டில் நேற்று நடந்தது. தி.மு.க.வை சேர்ந்த நா.கார்த்திக் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொண்டு பேசினார்.

இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறியதாவது:–

நாங்கள் இந்தப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த போகிறோம் என்று கூறினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள்.

அத்துடன் எங்களின் நிலத்துக்கு என்ன மதிப்பு உள்ளதோ அதைதான் நாங்கள் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதை அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தும்கூட யாரும் எங்களிடம் சரியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

நாங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று கூறவில்லை. எங்கள் நிலத்துக்கு தற்போது என்ன மதிப்பு உள்ளதோ அதை இழப்பீடாக கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ.விடமும் தெரிவித்து உள்ளோம். அவர் சட்டமன்றத்தில் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சிங்காநல்லூர் பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, வக்கீல் அருள்மொழி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்