அதிகார போதையில் செயல்படுகிறார் பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்

அதிகார போதையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனார்த்தன பூஜாரி கூறினார்.

Update: 2017-08-02 21:15 GMT

மங்களூரு,

அதிகார போதையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனார்த்தன பூஜாரி கூறினார்.

ஜனார்த்தன பூஜாரி பேட்டி

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜனார்த்தன பூஜாரி நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகம் உள்பட 39 இடங்களில் இன்று(அதாவது நேற்று) வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இப்போது டி.கே.சிவக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து உள்ளது.

இதுபோல எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் வீட்டில் கூட வருமான வரிசோதனை நடத்தப்படலாம். காங்கிரஸ் கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிசோதனை நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. வருமான வரிசோதனையால் எனக்கோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கோ எந்தவித பயமும் இல்லை.

தக்க பாடம் புகட்டுவார்கள்

மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீட்டில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மந்திரி டி.கே.சிவக்குமார் என்ன தீவிரவாதியா? அவர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த ஏன்? துணை ராணுவ படையினர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தன்னை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை என்று பிரதமர் மோடி அதிகார போதையில் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் கவனித்து கொண்டு தான் வருகிறார்கள்.

அவருக்கு தக்க நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். நான் மத்திய மந்திரியாக இருந்த போது, வருமான வரித்துறை அதிகாரத்தை பயன்படுத்தி கீழ்தரமான செயல்களில் ஈடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்