அரசு பெண்கள் பள்ளி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-02 22:45 GMT
வலங்கைமான்,

வலங்கைமான் சுள்ளானாற்று அருகே கும்பகோணம்-மன்னார்குடி மெயின் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே புதிதாக மதுக்கடை திறக்க போவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவிகளின் நலன் கருதி அங்கு மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி தாசில்தார் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். ஆனாலும் நேற்று மதியம் 12 மணி அளவில் பள்ளி அருகே மதுக்கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் இஞ்ஞாசிராஜ் மற்றும் வருவாய் துறையினர், வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்