மைசூருவில் உள்ள மந்திரி மாமனார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
மைசூருவில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமாரின் மாமனார் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மைசூரு,
மைசூருவில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமாரின் மாமனார் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறை சோதனைகர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீடு, பண்ணை வீடு, டெல்லியில் உள்ள வீடு, உறவினர் வீடுகள் என 39 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
டி.கே.சிவக்குமாரின் வீடுகள், உறவினர்கள் வீடுகள் என ஒரே நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு இந்த சோதனை நடத்தி உள்ளதாக கூறி டி.கே.சிவக்குமார் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்திலும் இந்த வருமான வரிசோதனை குறித்து எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்பியது. மேலும் மத்திய அரசு வருமான வரித்துறையை தங்கள் எதிரிகளை ஒடுக்கும் ஆயுதமாக பயன்படுத்துவதாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சொத்து ஆவணங்கள் சிக்கியதுஇந்த நிலையில் நேற்று மைசூரு இட்டிகேகூடு பகுதியில் உள்ள டி.கே. சிவக்குமாரின் மாமனார் திம்மய்யாவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது டி.கே.சிவக்குமார் தனது மாமனார் திம்மய்யா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? என ஆய்வு நடத்தினர். அப்போது திம்மய்யாவின் வீட்டில் இருந்து சொத்துகள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த ஆவணங்கள் குறித்து திம்மய்யாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.