கல்லிடைக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கல்லிடைக்குறிச்சி அருகே நேற்று இரவு முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

Update: 2017-08-02 20:30 GMT

அம்பை,

கல்லிடைக்குறிச்சி அருகே நேற்று இரவு முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர், ராமையா மகன் சக்திவேல் முருகன் (வயது 31). கொத்தனாருக்கு கையாள் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பொட்டல் ரெயில்வே கேட்டில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெயின் ரோட்டில் சென்ற போது, மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சக்திவேல் முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பிணமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசங்கர் மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தெற்கு வீரவநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள், வீடுகளின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சக்திவேல் முருகனும் ஈடுபட்டதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சக்திவேல் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சக்திவேல் முருகனுக்கு சரசுவதி என்ற மனைவியும், மகனும், மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்