நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2017-08-02 20:45 GMT

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

பாளையங்கோட்டை கோர்ட்டு அருகில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தின் அருகில் உள்ள கல்வெட்டான்குழியை மூடி பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறி ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் இரும்பு சட்டியில் மண்ணுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு 64 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு கல்வெட்டான்குழி உள்ளது. அந்த குழியை மூடி அங்கு பூங்கா அமைக்க வேண்டும். இல்லை எனில் வருகிற 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் சைவ வேளாளர் சங்கத்தினர் தலைவர் வீரபுத்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் தான் கடந்த 50 ஆண்டுகளாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது அந்த விழாக்களை ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றிவிட்டனர். இதனால் பொதுமக்கள் பார்க்க வர முடியாத நிலை உள்ளது. எனவே மீண்டும் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாவை வ.உ.சி. மைதானத்தில் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கழிவுநீர் ஓடை

தச்சநல்லூர் 3–வது வார்டு தளவாய்புரம் மக்கள் நலசங்கத்தினர் கொடுத்த மனுவில், தச்சநல்லூர் தளவாய்புரம் பகுதியில் உள்ள தெருக்களில் சாலைகள் இல்லாமல் மோசமாக உள்ளது. கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே கழிவுநீர் ஓடையை சரி செய்து தரவேண்டும். தெருக்களில் வண்ணக்கற்களில் சாலை அமைத்து தரவேண்டும். மின் விளக்கு, குடிதண்ணீர் வசதி செய்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்