திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-08-02 23:00 GMT

திருச்சி,

திருச்சி மாநகராட்சி 49–வது வார்டை சேர்ந்த ஆழ்வார்தோப்பு, 50–வது வார்டை சேர்ந்த சின்னசாமி நகர், ஒத்தமினார் கோபுரம், பென்சனர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேற்று காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலக வாசல் முன்பு நின்று, தங்கள் வார்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோ‌ஷம் போட்டனர். பெண்கள் நடத்திய இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து நகர பொறியாளர் நாகேஷ் அங்கு வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பெண்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும், புதிதாக ஆழ் துளை கிணறுகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக நகர பொறியாளர் வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்