ரெயில்வே பாலத்தில் 4 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் மழைநீர்

ஆம்பூர் அருகே ரெயில்வே பாலத்தில் 4 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2017-08-02 21:45 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம், மின்னூர் பகுதியில் ரெயில்வே தரைபாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆம்பூர் பகுதிக்கு வந்து செல்ல முடியும். அந்த பாலத்தின் அடியில் பெருமளவு பள்ளமாக மாறிவிட்டது. இதனால் மழை காலங்களில் பாலத்தின் அடியில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த நேரங்களில் அவ்வழியே பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக பெரியாங்குப்பம், மின்னூர் ஆகிய ஊர்களில் உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தனர். பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பாலத்தின் மீது ஏறி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மழைநீர் தொடர்ந்து பல நாட்களுக்கு அதிலேயே தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ரெயில்வே பாலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பெரியாங்குப்பம் பகுதியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ளது. ரெயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ரெயில்வே நிர்வாகம் பாலத்தின் அடியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்