சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துடன் வந்து சாமியாடிய பெண்ணால் பரபரப்பு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கம்பத்துடன் வந்து சாமியாடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2017-08-02 13:30 IST
சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தநிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. ஆனால் கம்பம் நடுதல் இல்லாமல் சில நிகழ்ச்சிகள் மட்டும் நடத்திக்கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் கம்பம் நடாவிட்டால் நாங்களே கம்பம் நடுவோம் என்று கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இணை ஆணையர் வரதராஜனிடம் மனு கொடுத்தனர்.

இதனால் தடையை மீறி கோவிலில் கம்பம் நடுவதற்கு மனுகொடுத்தவர்கள் வருவார்கள் என்றும், இதனால் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்றும் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கோவில் செயல் அலுவலர் மாலா மனு அளித்திருந்தார். அதையொட்டி நேற்று இரவு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு 9 மணியளவில் கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் திடீரென அருள் வந்து பக்தி பரவசத்துடன் சாமியாடினார். அப்போது, அவர் கையில் கம்பம் ஒன்றை வைத்துக்கொண்டு, கோவிலில் கம்பம் நடாமல் எப்படி திருவிழா நடத்துகிறீர்கள்? கோவிலில் கம்பம் நடுங்கள் என கூறினார். பெண் ஒருவர் அருள் வந்து ஆடியதை அறிந்த பக்தர்கள் அங்கு திரண்டனர். பிறகு சிறிது நேரத்தில் அந்த பெண் சகஜநிலைக்கு வந்ததை தொடர்ந்து கோவில் நிர்வாகிகளும், அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரும் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்