ரிசர்வ் வங்கி ஊழியர் போல பேசி தொழில் அதிபரிடம் ரூ.93 லட்சம் மோசடி

ரிசர்வ் வங்கி ஊழியர் போல பேசி தொழில் அதிபரிடம் ரூ.93 லட்சம் மோசடி செய்த மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-01 22:11 GMT

மும்பை,

ரிசர்வ் வங்கி ஊழியர் போல பேசி தொழில் அதிபரிடம் ரூ.93 லட்சம் மோசடி செய்த மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழில் அதிபர்

தென்மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் லலித் ஷா (வயது 66). தொழில் அதிபர். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது பேசியவர் இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அழைப்பதாக தெரிவித்தார். அவர் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் அதிபருக்கு பல கோடிகள் கடன் தர உள்ளதாக ஆசை வார்த்தை காட்டினார். மேலும் பலர் ரிசர்வ் வங்கி ஊழியர் என கூறி அவரை தொடர்பு கொண்டு மூளை சலவை செய்தனர். இறுதியில் தொழில்அதிபர் கடன் வாங்க சம்மதித்தார்.

இதையடுத்து அவர்கள் கடன் பெற ரிசர்வ் வங்கிக்கு சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என தொழில் அதிபரிடம் கூறினர்.

பணமோசடி

இதைநம்பிய தொழில்அதிபர் கடந்த 2 மாதமாக பல தவணைகளாக ரூ.93 லட்சம் வரை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பிவைத்தார். ஆனால் அவருக்கு எந்த கடனும் கிடைக்கவில்லை. எனவே தொழில் அதிபர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் என அவரிடம் பேசியவர்களுக்கு போன் செய்தார். ஆனால் அவர்கள் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் இதுகுறித்து டோங்கிரி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில்அதிபரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்