மாமல்லபுரத்தில் பள்ளி வகுப்பறையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது

மாமல்லபுரத்தில் பள்ளி வகுப்பறையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. வகுப்பறையின் மேற்கூரையே இடிந்து விட்டதாக தகவல் பரவியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Update: 2017-08-01 23:00 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரம் மாதா கோவில் சாலையில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியின் ஒரு வகுப்பறையின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு கலவை பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதால், வகுப்பறையில் யாரும் இல்லை. இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வகுப்பறையில் உள்ள மேற்கூரைதான் இடிந்து விழுந்து விட்டதாக ‘வாட்ஸ் அப்’பில் தகவல் பரவியதாக தெரிகிறது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் காலை 10 மணி அளவில் பள்ளி முன் முற்றுகையிட்டனர். பள்ளி கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளி நிர்வாகம் விளக்கம்

அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் வகுப்பறை கட்டிடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், சிமெண்டு கலவை பூச்சு மட்டும்தான் சிதிலமடைந்து விழுந்துவிட்டது என்றும், ‘வாட்ஸ் அப்’பில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தனர்.

மேலும், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன், பள்ளி தாளாளர் லியோடேம்னிக் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்கள். வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

பின்பு சிமெண்டு கலவை பூச்சு விழுந்த வகுப்பறை கட்டிடத்தை அவர்கள் பார்வையிட்டனர். விரைவில் இந்த வகுப்பறை கட்டிடம் சீரமைக்கப்படும் என்று பள்ளி நிர்வாகத்தினர் அவர்களிடம் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் நிருபர்களிடம் கூறுகையில், ‘பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிந்து விட்டதாக சிலர் ‘வாட்ஸ் அப்’பில் தவறான தகவல் பரப்பி உள்ளனர்.

ஆனால் சிமெண்டு கலவை பூச்சுதான் பெயர்ந்து விழுந்துள்ளது. பள்ளி கட்டிடத்தின் தரம் பாதுகாக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதுபோல் வதந்தி கிளப்பிவிடும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

மேலும் செய்திகள்