மது குடிக்க பணம் தராததால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது

திருப்பூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர், சேலையால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-08-01 23:00 GMT

அனுப்பர்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 43). இவருடைய மனைவி இந்திராகாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சேகர் தனது மனைவியை அழைத்து கொண்டு திருப்பூர் வந்துள்ளார். பின்னர் கணவன்–மனைவி இருவரும் 15 வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் இந்திராகாந்தி தையல் தொழிலாளியாகவும், சேகர் ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுடைய மகன்கள் 2 பேரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் சேகருடைய வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நேற்று காலை சேகர் தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சென்ற சேகரின் மகன்கள் 2 பேரும் தாய் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதபடி வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் சேகர் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சிவகாமியிடம் சென்று சரணடைந்தார். பின்னர் சிவகாமி, சேகரை 15 வேலம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சேகர் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது:–

எனக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த மாதம் 30–ந் தேதி மாலையில் மது வாங்கி குடித்தேன். சிறிது நேரத்தில் போதை தெளிந்து விட்டதால் அன்று இரவு மீண்டும் மது குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் மது குடிக்க எனது மனைவியிடம் பணம் கேட்டேன். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நான் எனது மனைவியின் கழுத்தை கையால் நெரித்தேன்.

அவர் தடுத்ததால் அருகில் இருந்த தலையணையை வைத்து முகத்தை அமுக்கினேன். பின்னர் சேலையால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். இரவு நேரம் என்பதால் வெளியே செல்லாமல் விடிய, விடிய எனது மனைவியின் உடல் அருகில் காத்திருந்தேன். பின்னர் காலையில் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு திருவண்ணாமலை சென்றேன். அங்கிருந்த 2 மகன்களிடம், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திருப்பூருக்கு அழைத்து வந்தேன். வீட்டிற்கு வந்த பின்னர் எனது மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு எனது மகன்கள் இருவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் நான் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தேன். அதன் பிறகு போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு சேகர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் வீட்டுக்குள் பிணமாக கிடந்த இந்திராகாந்தியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் ஆட்டோ டிரைவர், தனது மனைவியை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்