தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ளதடுப்பு பணிகள்

சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2017-08-01 22:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையையொட்டி உள்ள கிருஷ்ணா நகர், சக்தி நகர், கண்ணன் அவென்யூ, சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததே இதற்கு காரணம்.

இனி வரும் காலங்களில் வெள்ளபாதிப்புகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.10 கோடி

அந்த வகையில், தாம்பரம்-முடிச்சூர் சாலை குளக்கரை பகுதியில் இருந்து முடிச்சூரில் உள்ள வெளிவட்ட சாலை பகுதி வரை ரூ.10 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த பணிகள் விரைவாக நடைபெறவில்லை என அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் நேற்று காலை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தராஜ், உதவி பொறியாளர் நரேஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோருடன் வந்து முடிச்சூர் சாலையில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

வாக்குவாதம்

அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் வெளி பகுதியில் இருந்து வெள்ள நீர் வந்து தேங்குவதாகவும், எனவே மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி, மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கேட்டு கொண்டார். அதன்பின்னர் பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

விரைவுபடுத்த...

இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வெள்ளநீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறையினர் திட்டம் வகுத்து உள்ளனர். முடிச்சூர் சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைத்து, வெள்ள நீர் சர்வீஸ் சாலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதன்படி அங்கு சிறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் உயரமாக்கப்பட்டு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத இடங்களில் முதல் கட்டமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பணிகளை விரைவாக முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்