பாகூர் அரசு பள்ளியில் கவர்னர் திடீர் ஆய்வு மாணவர்களிடம் குறைகேட்டார்

பாகூர் அரசு பள்ளியில் கவர்னர் கிரண்பெடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? என்று மாணவர்களிடம் அவர் குறைகேட்டார்.

Update: 2017-08-01 22:30 GMT

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூரில் பாரதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் முதல்வர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், சரியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தாததால், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கவர்னர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.

அதன்பேரில் கவர்னர் கிரண்பெடி நேற்று மதியம் புதுவையில் இருந்து கார் மூலம் பாகூர் அரசு பள்ளிக்கு வருகை தந்து, திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்ட அவர், குடிநீர், கழிப்பிடம் வசதி சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் பிளஸ்–2 வகுப்பறைக்கு சென்ற கவர்னர், ஒவ்வொரு மாணவரிடமும் கடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு என்ன காரணம்? ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதா? ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? என கேட்டார். மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வந்து, ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை ஒழுங்காக படிக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

மேலும் மாணவர்களிடம் வேற்று பேப்பரை கொடுத்து, பள்ளியில் உள்ள குறைகளை எழுதி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மாணவர்களும் தங்கள் குறைகளை தமிழிலேயே எழுதி கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கவர்னர், மாணவர்கள் எழுத்துபூர்வமாக கொடுத்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்து, அதனை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பள்ளியை பார்வையிட மீண்டும் வருவேன் என்று கவர்னர் கூறினார்.

ஆய்வின்போது பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்