கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடைபயணம்

கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டங்களை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி

Update: 2017-08-01 20:30 GMT
உப்பள்ளி,

கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டங்களை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று படகூருவில் இருந்து நவலகுந்துவுக்கு விவசாயிகள் கருப்பு வேட்டியை கட்டிக் கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

குடிநீர் திட்டங்கள்

வடகர்நாடக மாவட்டங்களான தார்வார், ராய்ச்சூர், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டாக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு(2016) குடிநீர் திட்டங்களை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தார்வார், ராய்ச்சூர், கதக் உள்பட 5 மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் உப்பள்ளி தாலுகா சவனூர் பகுதியில் விவசாயிகள், பெண்கள், மூதாட்டிகள் மீதும் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் மீது தடியடி நடத்தியதாக 4 போலீஸ்காரர்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விவசாயிகள் நடைபயணம்

இந்த நிலையில் கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 2-வது ஆண்டை எட்டியது. ஆனாலும் இன்னும் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா படகூரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 2 ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டித்து கருப்பு வேட்டியை கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

காலை 9.30 மணிக்கு படகூரு கிராமத்தில் இருந்து தொடங்கிய விவசாயிகளின் நடைபயணத்தை நவலகுந்து கவிமடம் பசவலிங்கசாமி கோவிலின் மடாதிபதி சித்தராம தேவர் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தில் 100-க்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணிக்கு நடைபயணம் செய்த விவசாயிகள் நவலகுந்துவை சென்று அடைந்தனர்.

போராட்டம்

நவலகுந்துவுக்கு சென்று அடைந்ததும் விவசாயிகள் கலசா-பண்டூரி, மகதாயி-மல்லபிரபா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்