நூலகத்தில் கூடுதலாக தமிழ் பண்டிதரை நியமிக்க நடவடிக்கை எம்.எல்.ஏ. தகவல்

தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தில் கூடுதலாக தமிழ் பண்டிதரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டபேரவை நூலக குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2017-08-01 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு சட்டபேரவை நூலக குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ஆண்டி அம்பலம், சண்முகம், சின்னதம்பி, சீத்தாபதி, செல்வம், ராமர், விஜயகுமார் ஆகியோர் தஞ்சை சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நூலக குழுவினர் பழமை வாய்ந்த ஓவியங்கள், வரைபடங்கள், ஓலைச்சுவடிகள், மோடி ஆவணங்கள், டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படும் முறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நூலகத்தில் உள்ள பல்வேறு வகையான நூல்களையும் பார்வையிட்டு, நூலகத்தில் நடைபெற்று வரும் பயிற்சிகள் குறித்தும், ஓலைச்சுவடிகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தனர்.

சரசுவதிமகால் நூலக நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ராமகிருஷ்ணன் கூறும்போது, தமிழ்மொழி, தெலுங்கு மொழி, சமஸ்கிருதமொழி, மராட்டிய மொழி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகள் குறிப்பிட்ட மாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியை 6 மாத காலம் நடத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 19,228 சமஸ்கிருத ஓலைச்சுவடிகளும், 19,988 காகித சுவடிகளும், 4,151 தமிழ் ஓலைச்சுவடிகளும், 786 தெலுங்கு ஓலைச்சுவடிகளும், 48 காகித சுவடிகளும், 3,133 மராட்டிய காகித சுவடிகளும், 72 ஆயிரம் நூல்களும் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளன. பராமரிப்பாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்ப வேண்டும். தமிழ் பண்டிதர் ஒருவர் தான் உள்ளார். கூடுதலாக இன்னொரு தமிழ் பண்டிதரை நியமனம் செய்ய வேண்டும். 2018-19-ம் நிதியாண்டிற்கு நூலக வளர்ச்சி நிதியாக ரூ.5 கோடியே 20 லட்சம் வழங்க கோரி மத்தியஅரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது என்றார்.

நூலக ஆட்சிக்குழு உறுப்பினர் சிவாஜிராஜா போன்ஸ்லே கூறும்போது, சரசுவதிமகால் நூலகம் மட்டுமின்றி ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சிக்கு வழிகாட்டுவதற்கு பி.எச்டி. முடித்த தமிழ் பண்டிதரை நியமனம் செய்ய வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு ஓலைச்சுவடிகளை கொண்டு சேர்க்கும் வகையில் அவற்றை பாதுகாக்க பராமரிப்பு அலுவலரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக தமிழகஅரசு ரூ.75 லட்சம் வழங்கி வருகிறது. இந்த நிதி போதாது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் நூலகக்குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் தஞ்சை சரசுவதிமகால் நூலகத்திற்கு வந்து ஆராய்ச்சிக்காக பல நூல்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காலத்தை வென்ற கலைபெட்டகமாக விளங்கும் இந்த நூலகம் நாயக்க மன்னர் காலத்தில் தொடங்கப்பட்டு மராட்டிய மன்னர் காலத்தில் வளர்க்கப்பட்டது. கிணற்றில் இரைக்க, இரைக்க நீர் ஊறுவதுபோல் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்க, படிக்க நமது அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இந்த நூலகம் விளங்குகிறது. நூலக வளர்ச்சிக்காக பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தமிழ் பண்டிதர் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து இந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க இந்த குழு நடவடிக்கை எடுக்கும். அதேபோல பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பயிற்சி காலத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். நூலகத்தை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரிடம் பேசி கூடுதல் நிதி ஒதுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வின்போது கலெக்டர் அண்ணாதுரை, குழு அலுவலர் நிலை துணை செயலாளர் பெர்லின் ரூப்குமார், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், மாவட்ட நூலகர் செல்வராஜ், சரசுவதிமகால் நூலகர் சுதர்ஷன், தமிழ் பண்டிதர் மணிமாறன், அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கரந்தை தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தை இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் இன்று(புதன்கிழமை) நூலக குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்