சுதந்திர தினவிழாவை பாளை. வ.உ.சி. மைதானத்தில் நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், காங்கிரசார் மனு

சுதந்திர தின விழாவை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு கொடுத்தனர்.;

Update: 2017-08-01 20:45 GMT

நெல்லை,

சுதந்திர தின விழாவை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு கொடுத்தனர்.

சுதந்திர தினவிழா

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் துணை தலைவர்கள் வாகை கணேசன், உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜேஷ்முருகன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா கடந்த 50 ஆண்டுகளாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தான் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த விழாக்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த விழா மற்றும் கலைநிகழ்ச்சியை பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் செல்லமுடியாத நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன்கருதி பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்திலேயே சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தினவிழாவை நடத்த வேண்டும். வருகிற சுதந்திர தினவிழாவை அரசு சார்பில் வ.உ.சி.மைதானத்தில் நடத்தவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அங்கு கொடியேற்றி விழா நடத்தப்படும் என்று கூறி உள்ளனர்.

குடிநீர்

கடையம் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் அனைத்து கட்சி குழுவினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடையம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ராமநதி அணையின் வடகால் வழியாக ஜம்புநதியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்த ஆற்றில் தண்ணீர் வந்தால் மாதாபுரத்தில் இருந்து பொட்டல்புதூர் வரை உள்ள குடிநீர் உறைகிணறுகளில் தண்ணீர் பெருகும். இதனால் அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.

சேரன்மாதேவி பகுதி விவசாயிகள், ஆடு, மாடு மேய்போர்கள் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர்கள் பாலாஜி கிருஷ்ணசாமி, தமிழ்செல்வன், கோபாலசமுத்திரம் நகர தலைவர் ராஜவேல், லட்சுமணன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில், ஆடு, மாடுகள் குடிப்பதற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கால்வாய்களில் வருகிற சாக்கடை தண்ணீரை ஆடு, மாடுகள் குடித்து இறந்துவிடுகின்றன. எனவே ஆடு, மாடுகள் குடிப்பதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறையாவது கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த முருகேசன் கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் 3–வது பிளாட்பாரத்தின் அருகில் உள்ள கழிப்பறை உடைப்பு ஏற்பட்டதால் அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி பஸ்நிலையத்திற்குள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு பயணிகள் நிற்க முடியாதநிலை உள்ளது. எனவே உடனே அந்த உடைப்பை சரி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்