ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி துறையில் விதிமுறைகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதாக கூறி சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்கக்கல்வி துறையில் விதிமுறைகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதாக கூறி சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமரேசன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தனியார் பள்ளி மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாவட்டச் செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நரசிம்மன், மாவட்ட துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.