மின் இணைப்பை துண்டிக்கக்கோரி வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்கு நோட்டீஸ்
மின் இணைப்பை துண்டிக்கக்கோரி வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மதுரை,
தேனி லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் கிராமத்தில் உள்ள முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். அப்போது கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
தற்போது அந்த கிணற்றில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது மின்வாரிய விதிகளுக்கு எதிரானது. இந்தநிலையில் விஜயலட்சுமியின் நிலத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடத்தை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து கிணறு தோண்டும் பணிக்கு தடை விதித்து உள்ளார். அந்த நிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த மனு குறித்து நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.