காமராஜர் பல்கலைக்கழகத்தின் ‘துணைவேந்தராக செல்லத்துரையை தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்’

‘காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரையை தேர்வு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம்‘ என்று துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர்கள் மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2017-08-01 23:00 GMT

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் லயோனல் அந்தோணிராஜ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் கன்வீனராக இருந்த சீனிவாசன் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து, தற்போது காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள செல்லத்துரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் செல்லத்துரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் பல்கலைக்கழக துணை வேந்தராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்‘ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு குறித்து பல்கலைக்கழக வேந்தரின்(கவர்னர்) தனி செயலாளர், துணைவேந்தர் தேடுதல் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவர்னரின் தனி செயலாளர் தரப்பில் பதில் மனுவை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர்கள் ஹரிஷ் எல்.மேத்தா தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்த ராமசாமிக்கும், கன்வீனர் முருகதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராமசாமி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஜி.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். என்னையும் மரியாதை குறைவாகத்தான் கன்வீனர் நடத்தினார். துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பத்தில் ஏதேனும் குற்றவழக்கில் தொடர்பு உடையவரா என்ற விவரம் குறிப்பிட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்தோம். ஆனால் விண்ணப்பத்தில் அந்த பகுதியை மட்டும் திட்டமிட்டு கன்வீனர் நீக்கிவிட்டார்.

துணைவேந்தர் பதவிக்கான இறுதி பட்டியல் தொடர்பான கூட்டம் சென்னையில் கவர்னர் மாளிகை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அங்கு, தற்போதைய துணைவேந்தர் செல்லத்துரை மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் பேராசிரியராக பணியாற்றிய போதுமான அனுபவர் இல்லை என்று அவரை துணைவேந்தராக நியமிக்க ஆட்சேபம் தெரிவித்தேன். செல்லத்துரையை தான் துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கன்வீனர் பிடிவாதமாக இருந்தார். அரசின் முடிவு இதுதான் நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் நிர்பந்தப்படுத்தியதால் தான் நாங்கள் செல்லத்துரையை தேர்வு செய்ய நேர்ந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல தேடுதல் குழுவின் மற்றொரு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த மே மாதம் 19–ந்தேதி திடீரென தேடுதல் குழுவின் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு வருமாறு கன்வீனர் என்னை அழைத்தார். அங்கு செல்லத்துரையை துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரை செய்ததை நான் எதிர்த்தேன். அவருக்கு தகுதியில்லை என்று நான் கூறியதை கண்டுகொள்ளவில்லை. துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த பதவிக்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டியபோதும், செல்லத்துரையை நியமிக்கும் நடவடிக்கையில் தான் கன்வீனர் ஈடுபட்டார். இதில் காமராஜர் பல்கலைக்கழக சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை. இறுதியாக 3 பேரை தேர்வு செய்து கவர்னரிடம் பரிந்துரை செய்தார். அப்போது செல்லத்துரையின் விவரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தை மட்டும் கூடுதலாக கன்வீனர் கொடுத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், துணைவேந்தர் தேடுதல் குழுவின் கன்வீனர் உள்ளிட்டோர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16–ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்