கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்; 3 பேர் படுகாயம்
கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து 4–ந்தேதி வரை கல்லூரிக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள விடுதியில் 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். இதில் 2–ம் ஆண்டு மற்றும் 3–ம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் விடுதியில் மோதல் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடுதி மாணவர்கள் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். அப்போது விடுதியில் நடந்த சம்பவம் குறித்து தங்களது நண்பர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மதியம் 12.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆக்கி மட்டைகளால் தாக்கிக்கொண்டனர்.
அதை பார்த்ததும் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து தங்களது வகுப்பு அறைகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து ஓடினர். இந்த மோதலில் 3 மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் திரண்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கும் கல்லூரி முன்பாகவும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
மாணவர்களின் மோதலை தொடர்ந்து கல்லூரிக்கு வருகிற 4–ந்தேதி வரை தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுதி 6–ந்தேதி வரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.