கருவி மூலம் பால் கறந்த போது மின்சாரம் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் பலி மனைவி படுகாயம்; பசு மாடும் சாவு
தேனி அருகே பசுமாட்டில் கருவி மூலம் பால் கறந்த போது மின்சாரம் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் பலியானார். மாடும் இறந்தது. ராணுவ வீரரின் மனைவி படுகாயம் அடைந்தார்.
தேனி,
தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சென்றாயன் மகன் ரஜினிகாந்த் (வயது 39). இவர், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ரஜினிகாந்த் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வாழையாத்துப்பட்டியில் இருந்த நிலத்தை சீர்திருத்தம் செய்து அதில் தீவனப் புற்கள் வளர்த்து, அதை வைத்து பசு மாடுகளை பராமரித்து வந்தார். பால் கறப்பதற்காக பால் கறக்கும் கருவி வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்த கருவி மின்சாரம் மூலம் இயங்குவது ஆகும்.
நேற்று காலையில் வழக்கம் போல் ரஜினிகாந்த் பால் கறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு மாட்டில் பால் கறந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பசு மாடும் அதே இடத்தில் பலியானது.
அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த அவருடைய மனைவி ஜெயலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மின்சார சுவிட்சை அனைத்து விட்டு, ரஜினிகாந்த்தை மீட்க முயன்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதை அறிந்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காயம் அடைந்து இருந்த ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ரஜினிகாந்த் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.