அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம் சப்–கலெக்டர் அதிரடி நடவடிக்கை
திருப்பத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சப்–கலெக்டர் உத்தரவின்படி அகற்றப்பட்டன.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி, தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையத்தை தூய்மை செய்யும் பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் ராஜரத்தினம் வரவேற்றார். நகர அபிவிருத்தி அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
திருப்பத்தூர் சப்–கலெக்டர் கார்த்திகேயன், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரியஆரோக்கியம் ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவ–மாணவிகள், நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தை சுத்தம் செய்தனர்.
அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த சப்–கலெக்டர் கார்த்திகேயன் பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு சப்–கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சொந்த கட்டிடத்தின் மீது கட்டிட உறுதி சான்று, நகராட்சி, சப்–கலெக்டர் அனுமதி பெறாமல் பேனர் வைத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
சப்–கலெக்டரின் அதிரடியான இந்த நடவடிக்கையால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.