‘நீட்’ தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்தக்கோரி திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-08-01 23:00 GMT

திருச்சி,

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். மாணவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இதுவரை தொடங்கவில்லை.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். வினீத் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அருள்ஜோதி, அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் புதிய தமிழகம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குணா, இளைஞர் அணி செயலாளர் பாலு, சோமசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் மாணவர் அணி செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்