அரசு பஸ் டிரைவர் சாவில் திருப்பம்: புரோட்டா தகராறில் கொலை செய்த 2 பேர் கைது

பூதப்பாண்டி அருகே அரசு பஸ் டிரைவர் சாவில் திருப்பம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். புரோட்டா தகராறில் கொன்றதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.;

Update:2017-08-02 05:00 IST
அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் கீரங்குளத்தை சேர்ந்தவர் ஏசுமணி (வயது 70). இவருடைய மகன் காட்வின் (42). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30–ந் தேதி இரவு காட்வினும், ஏசுமணியும் குறத்தியறை பகுதியில் சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து இருவரையும் மீட்டு பூதப்பாண்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் காட்வின் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஏசுமணி மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார், விபத்தில் காட்வின் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஏசுமணிக்கு மயக்கம் தெளிந்து நினைவு திரும்பியது. அவர் ஆஸ்பத்திரியில் வந்த உறவினர்களிடம் தன்னையும், மகனையும் சிலர் சேர்ந்து தாக்கியதாகவும், அதில்தான் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து எதுவும் நிகழவில்லை என்றும் கூறினார்.

மேலும், தங்கள் இருவரையும் தாக்கியவர்களின் பெயர் மற்றும் அடையாளத்தையும் தெரிவித்தார். இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இந்த தகவலை பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவித்தனர்.

மேலும், நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர். அத்துடன் நேற்றுமுன்தினம் மாலை கடுக்கரை சந்திப்பில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காட்வின் விபத்தில் இறக்கவில்லை. இதற்கு பின்னணியில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்டனர். அதன் அடிப்படையில் அதிரடி விசாரணை நடத்த தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, தனிப்படை போலீசார் காட்வின் சாவு குறித்து விசாரித்தனர். இதில் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாத்தியை சேர்ந்த அமலன் (வயது 22), சுதீர் (30), விஜயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமலன், சுதீர் ஆகியோரை இரவோடு இரவாக தனிப்படை போலீசார் பிடித்தனர். பின்னர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், இவர்கள் தாக்கியதில் காட்வின் பலியாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

கைதான அமலன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

சுதீர் பொக்லைன் உரிமையாளராக உள்ளார். நான் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். சம்பவத்தன்று நான் புரோட்டா பார்சல் வங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். வீட்டில் சென்று பார்த்த போது புரோட்டா பார்சலை காணவில்லை. வழியில் அது விழுந்திருக்கலாம் என்று கருதி நான் பார்சலை தேடி வந்த வழியே திரும்பிச் சென்றேன்.

அப்போது குறத்தியறை பாலர்பள்ளி அருகே ஏசுமணி ஒரு பார்சலை கையில் வைத்து புரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரிடம் அந்த பார்சலை வழியில் இருந்து எடுத்தீர்களா? என்று கேட்டேன். இதில் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், அவரை தாக்கினேன்.

காயமடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் காட்வினும், அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஏசுமணிக்கு ஆதரவாக என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் என்னை அடித்து உதைத்தனர்.

இதுபற்றி நான், பொக்லைன் உரிமையாளர் சுதீருக்கு செல்போனில் தகவல் கொடுத்தேன். சிறிது நேரம் கழிந்து அவரும், விஜயனும் அங்கு வந்தனர். அப்போது, ஏசுமணியும், காட்வினும் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால், நாங்கள் காட்வினையும், ஏசுமணியையும் சரமாரியாக தாக்கினோம்.

காட்வினை கல்லால் அடித்தோம். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அவரது மோட்டார் சைக்கிளை அவர் அருகே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

 மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் விஜயனை போலீசார் தேடி வருகிறார்கள்.  

மேலும் செய்திகள்