செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியரால் பரபரப்பு
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் மகபூப் சுபுகானி (வயது 35). இவர் பார்வதிபுரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் கலீல் ரகுமான் (45). ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மகபூப் சுபுகானி ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் மகபூப் சுபுகானி (வயது 35). இவர் பார்வதிபுரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் கலீல் ரகுமான் (45). ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மகபூப் சுபுகானி ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். கலீல் ரகுமான் தனது தம்பியிடம் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறும், அதற்குரிய பணத்தை தனக்கு தரும் சம்பளத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பிடித்தம் செய்து கொள்ளுமாறும் கூறியதாக தெரிகிறது. அதன்படி மகபூப் சுபுகாணியும் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்கு சம்பளத்தில் ஒரு தொகையை பிடித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கலீல்ரகுமான் வேலைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மகபூப் சுபுகானி இரவு நேரத்தில் அண்ணன் வீட்டுக்கு சென்று ஏன் வேலைக்கு வரவில்லை? என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலீல்ரகுமான் நேற்று மதியம் தம்பியின் ஓட்டலுக்கு வந்து வாய்த்தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவருடைய தம்பி, கலீல் ரகுமானுக்கு வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளின் சாவியை வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கலீல் ரகுமான், தம்பி நடத்தி வந்த ஓட்டலின் மாடியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் தனது தம்பி மோட்டார் சைக்கிளின் சாவியை தராவிட்டால் நான் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றுகூறி மிரட்டினார். இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் அங்கு வந்து ஒரு சாவியை கலீல் ரகுமானிடம் காண்பித்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். உடனே அவரும் கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரைப்பிடித்து வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். ஓட்டல் ஊழியர் விடுத்த தற்கொலை மிரட்டலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.