செம்பூர் நெடுஞ்சாலையில் கியாஸ் கசிவால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு
செம்பூரில் உள்ள மும்பை- பன்வெல் நெடுஞ்சாலையில் கியாஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை,
மும்பை செம்பூர் நாக்காவில் மும்பை- பன்வெல் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பூமிக்கடியில் மகாநகர் கியாஸ் நிறுவனத்தின் கியாஸ் குழாய் செல்கிறது. நேற்று இங்கு ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் குழாயின் வால்வு உடைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த குழாயில் இருந்து கியாஸ் கசிவு உண்டானது. சிறிது நேரத்தில் வேகமாக கியாஸ் வெளியேறியது.
இதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பெட்ரோல் பங்க் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளை எச்சரித்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
மும்பை- பன்வெல் நெடுஞ்சாலையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே வால்வை சரி செய்து, கியாஸ் கசிவை சரி செய்யும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கியாஸ் குழாய் சரி செய்யப்பட்டது.
இதன் பின்னர் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் செம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.