மைசூரு தசரா விழா சின்னம் வெளியீடு மந்திரி எச்.சி.மகாதேவப்பா வெளியிட்டார்
மைசூரு தசரா விழா சின்னத்தை நேற்று மந்திரி எச்.சி.மகாதேவப்பா வெளியிட்டார்.
மைசூரு,
உலகப்புகழ் பெற்ற தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 21-ந் தேதி தொடங்குகிறது. மைசூருவில், விழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தசரா விழாவுக்காக ரூ.15 கோடி செலவாகும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது.
தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளும், விழாவுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று தசரா விழாவுக்கான சின்னம் வெளியிடப்படும் நிகழ்ச்சி மைசூருவில் நடந்தது. விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா கலந்து கொண்டு இந்த ஆண்டுக்கான தசரா விழா சின்னத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜ பயண பூஜை
தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக வருகிற 15-ந் தேதி மைசூரு மாவட்டம் நாகரஒலே வனப்பகுதியில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா யானை உள்பட 7 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட உள்ளன.
ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்காக 15-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் மைசூரு மாவட்டம் நாகாப்புரா கிராமத்தில் கஜ பயண பூஜை நடக்கிறது. அப்போது அர்ஜுனா உள்பட 7 யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உணவுகள் வழங்கப்பட உள்ளன.
பல்வேறு பயிற்சிகள்...
அதன்பிறகு யானைகள் அனைத்தும் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக அழைத்து வரப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து 7 யானைகளும் லாரி மூலம் மைசூரு அசோகபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறைக்கு அழைத்து வரப்படுகின்றன. அங்கு வந்த பிறகு, நல்லநாள் பார்த்து அரண்மனை சம்பிரதாயப்படி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் யானைகள் அனைத்தும் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றன.
அங்கு தசரா யானைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் யானைகள் தங்க வைக்கப்படுகின்றன. அங்கு யானைகள் பராமரிக்கப்படும். மேலும் அவைகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் கொடுக்கப்படும்.
2-வது கட்டமாக 7 யானைகள்
முதற்கட்ட யானைகள் வந்த பிறகு, அடுத்த 15 நாட்கள் கழித்து 2-வது கட்டமாக 7 யானைகள் அழைத்து வரப்படும். பின்னர் அனைத்து யானைகளுக்கும் ஒன்றாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.