தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், பேக்கரிக்குள் புகுந்தது பெண் உள்பட 2 பேர் பலி
துமகூரு அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் பேக்கரிக்குள் புகுந்தது. இதில் பேக்கரி உரிமையாளர் மற்றும் பஸ்சில் இருந்த பெண் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.;
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கோலாலா பகுதியில் பேக்கரி நடத்தி வந்தவர் குமார்(வயது 35). நேற்று காலையில் அவர் வழக்கம்போல் பேக்கரி கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மதியம் பேக்கரி முன்பு செல்லும் சாலையில் தனியார் பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி வந்தது.
அந்த பஸ் குமாரின் பேக்கரிக்குள் திடீரென்று புகுந்தது. இதனால் பேக்கரியின் உள்ளே இருந்த குமார் மற்றும் பஸ்சில் இருந்த பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோலாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண் உள்பட 2 பேர் பலி
அப்போது, பஸ்சில் இருந்த பெண் லட்சுமியம்மா(50) என்பவர் படுகாயம் அடைந்து இறந்ததும், குமார் உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, குமாரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இறந்துபோன லட்சுமியம்மா, குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோலாலா பகுதியில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் பஸ்சில் ‘பிரேக்‘ பிடிக்காததால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோலாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.