காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி

மேச்சேரி அருகே காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2017-07-31 23:30 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே புக்கம்பட்டி சாரளகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் மதன் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ. என்ற பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இவருடைய உறவினர் தமிழரசுவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மதன் தனது நண்பர்கள் 8 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான கூனாண்டியூர் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர்.

அப்போது அந்த ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பரிசலை ஓட்டிச்சென்று மீன்பிடிக்க மதனும், அவருடைய நண்பர்களும் திட்டமிட்டனர். அங்கு பரிசல் ஓட்டி இல்லாத நிலையில், மதன் தனது நண்பர்கள் 5 பேருடன் கரையோரம் மீன்பிடிக்க பரிசலை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பரிசல் கவிழ்ந்தது. இதில் மதன் உள்பட 6 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் அவர்களில் மதனின் நண்பர்கள் 5 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். ஆனால் மதன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மதனின் உடலை பரிசலில் சென்று தேடினர். பின்னர் அந்த மாணவரின் உடலை மீட்டு பரிசல் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். கரையில் இருந்த அவருடைய உறவினர் தமிழரசு மற்றும் நண்பர்கள் மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். அந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினரின் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர் பரிசல் கவிழ்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. 

மேலும் செய்திகள்