குடியாத்தம் அருகே பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-31 22:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் அருகே ராமாலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இப்பள்ளியில் தற்போது 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இப்பகுதி மாணவர்கள் மேல்படிப்புக்காக 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் பகுதிக்கும் வர வேண்டிய நிலை உள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது மாவட்டத்தில் பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் ராமாலை நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில் இந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி நேற்று காலை 9 மணிக்கு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் நாகம்மாள், தொடக்க கல்வி அலுவலர்கள் இளவரசன், ராபர்ட், வருவாய் ஆய்வாளர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் புஜ்ஜவாணி உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு ரூ.1 லட்சம் கட்டணத்தை செலுத்த வேண்டும், இதுகுறித்து உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் 11 மணி அளவில் மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்றனர். பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்