ஊசியால் குத்தி மீனவர் கொலை வீட்டில் தவறி விழுந்ததாக நாடகமாடிய தந்தை கைது

தூத்துக்குடி அருகே மீனவர் ஊசியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வீட்டில் தவறி விழுந்ததாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-07-31 23:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள அந்தோணியார்புரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 35). மீனவரான இவர் நேற்று முன்தினம் காலையில் கடலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் தவறி விழுந்து பிரபாகரன் இறந்து விட்டதாக அவருடைய தந்தை ராஜபாண்டி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவல் புதுக்கோட்டை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரபாகரனின் நெஞ்சு பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் 2 முறை குத்தப்பட்டு இருந்ததும், அதனாலேயே அவர் இறந்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பிரபாகரன் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது ராஜபாண்டி, போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், ராஜபாண்டி தனது மகனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கைதான ராஜபாண்டி(66), போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் பிரபாகரனின் மனைவி பொன்னரசி கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மது போதையில் வீட்டுக்கு வந்த பிரபாகரன், வீட்டில் இருந்த எங்களிடம் தகராறு செய்தான்.

அப்போது நான் பொறுமையாகத்தான் இருந்தேன். ஆனால் பிரபாகரன் வீட்டில் இருந்த கண்ணாடி பொருட்கள், டி.வி. உள்ளிட்டவைகளை அடித்து உடைத்தான். அதனை நான் கண்டித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவன், என்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றான்.

அப்போது வீட்டில் இருந்த வலை பின்ன பயன்படுத்தப்படும் ஊசியால் பிரபாகரனின் நெஞ்சில் குத்தி கொலை செய்தேன். பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதால், மதுபோதையில் பிரபாகரன் கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் விசாரணையில் தப்ப முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்