அரசு மணல் குவாரி அமைத்தால் போராட்டம் நடத்தப்படும் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

மணத்தட்டை பகுதியில் அரசு மணல் குவாரி அமைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-07-31 22:45 GMT
குளித்தலை,

குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் பகுதியில் கட்சி கொடி ஏற்றிவைத்தார். பின்னர் குளித்தலை அருகே மணத்தட்டை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும், குளித்தலை உழவர் சந்தை- மணப்பாறை ரெயில்வே கேட் செல்லும் சாலையில் உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலத்தடி நீர்மட்டம்

குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை காவிரி ஆற்றுப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இடம் தேர்வு செய்துள்ளது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது பாராட்டுக்குறியது. திருச்சியில் இருந்து இப்பகுதி வரை காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆற்றில் மணல் அள்ளியதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குளித்தலை- முசிறி பாலத்தை பார்வை யிட்டபோது, இங்கு 10 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

போராட்டம்

காவிரி ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியிலும் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. மணத்தட்டை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும். இதை மீறி மணல் குவாரி அமைக்க அரசு முயற்சி எடுத்தால் இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

இதேபோல் குளித்தலை உழவர் சந்தை- மணப்பாறை ரெயில்வே கேட் இடையே உள்ள சாலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் விலைக்கு வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கந்தசாமி, குளித்தலை ஒன்றிய செயலாளர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்