சாலையில் கிடந்த 60 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், கமி‌ஷனர் பாராட்டு

கோவையில் சாலையில் கிடந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 பவுன் நகையை ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.;

Update: 2017-07-31 22:45 GMT

கோவை,

கோவை தெலுங்குபாளையம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(வயது 45). இவர் கோவை டி.பி. சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றுக்காலை 9.30 மணியளவில் அவர் சவாரிக்காக காத்திருந்தார். வாகன நெரிசல் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள டி.பி. சாலையில் ஒரு மஞ்சள் நிற பை கிடந்தது. வாகனங்களில் சென்றவர்கள் அதை கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த ஆட்டோ டிரைவர் முனியப்பன் உடனே ஓடிச்சென்று அந்த பையை எடுத்து வந்து பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் யாரோ அதை தவறவிட்டு சென்றதை தெரிந்து கொண்டார். உடனே அவர் தனது ஸ்டேண்டில் இருந்த சக ஆட்டோ டிரைவர்களிடம் கூறினார்.

அவர்களுடன் அருகில் இருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு முனியப்பன் அந்த பையை எடுத்துச் சென்று கொடுத்தார். அந்த பையை வாங்கிய போலீசார் அதுகுறித்து ஆட்டோ டிரைவர் முனியப்பனிடம் விசாரித்தனர். அந்த பையில் 20 பவுன் எடையில் 20 தங்க நாணயங்கள் மற்றும் 40 பவுன் எடையில் தங்க சங்கிலிகள் மற்றும் நெக்லஸ் ஆகியவை இருந்தன. அந்த பையில் மொத்தம் 60 பவுன் நகை இருந்தது.

அப்போது ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேப்பர் கடை வைத்து நடத்தி வரும் ஒரு தொழில் அதிபர் அங்கு வந்தார். அவர் தனது தேவைக்காக 60 பவுன் நகையை தனது கடை மேலாளரிடம் கொடுத்து வங்கியில் அடகு வைக்க கொடுத்து அனுப்பினேன். இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அந்த நகைகள் எங்கோ விழுந்து விட்டன என்று கூறி அவற்றின் அடையாளங்களை தெரிவித்தார்.

உடனே போலீசார் அந்த தொழில்அதிபரிடம், ‘சாலையில் கிடந்த அந்த நகைகளை ஆட்டோ டிரைவர் எடுத்து எங்களிடம் ஒப்படைத்து விட்டார். எனவே நீங்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்று நகைகளின் அடையாளங்களை கூறி வாங்கி கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவரும், நகையை தவறவிட்டவரும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் சென்றனர். அங்கு வைத்து நகையை தொழில் அதிபரிடம் போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் ஒப்படைத்தார். சாலையில் கிடந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் தங்க நகைகளை எடுத்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முனியப்பனின் நேர்மையை கமி‌ஷனர் அமல்ராஜ் பாராட்டி ரூ. ஆயிரம் ரொக்கப்பரிசு கொடுத்து கவுரவித்தார். நகையை தவற விட்ட தொழில்அதிபர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு கொடுத்து நன்றி தெரிவித்தார்.

சாலையில் 10 ரூபாய் கிடந்தாலே அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் இந்த காலத்தில் கேட்பாரற்று சாலையில் கிடந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் தங்க நகையை எடுத்து ஒப்படைத்த முனியப்பன் கூறியதாவது:–

என் மனைவி பெயர் மணிமேகலை(35). எங்களுக்கு அஜீத்குமார்(21) என்ற மகனும், ஐஸ்வர்யா(19)என்ற மகளும் உள்ளனர். அஜீத்குமார் பி.பி.எம். முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

நான் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளேன். இதற்கு முன்பு என் ஆட்டோவில் தவற விட்டுச்சென்ற பல செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளேன். இதே போல சாலையில் கடந்த மணிபர்சு போஷின்றவற்றையும் போலீசில் ஒப்படைத்துள்ளேன்,,

தற்போது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகையை உரியவர்களிடம் ஒப்படைத்தது மனதுக்கு சந்தோ‌ஷமாக உள்ளது. இதை பலரும் பாராட்டுவதை பார்க்கும் போது எனது செயலை நினைத்தே எனக்கு பெருமையாக உள்ளது. இந்த செயலுக்காக என்னை செல்போனில் பலரும் அழைத்து பாராட்டி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்