குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் விபத்து கார் மோதி பிரியாணி கடை உரிமையாளர் பலி
குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் கார் மோதியதில், பிரியாணி கடை உரிமையாளர் மேம்பாலத்தில் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு உயிர் இழந்தார்.
தாம்பரம்,
சென்னை, ஏழுகிணறு, செயின்ட் சேவியர் தெருவை சேர்ந்தவர் இக்பால் (வயது 47). இவர் சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து மின்சார ரெயில் மூலமாக குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கடைக்கு செல்வார். பின்னர் இரவில் மோட்டார்சைக்கிளை குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் விட்டு விட்டு மீண்டும் மின்சார ரெயிலில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
எதிர் திசையில்...
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு சுமார் 11 மணியளவில் மோட்டார்சைக்கிளில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனங்கள் இன்றி பாலம் காலியாக இருந்ததால், ரெயில் நிலையத்திற்கு விரைவாக செல்லவேண்டும் என்பதற்காக பாலத்தின் எதிர் திசையில் அவர் சென்று உள்ளார்.
கார் மோதியது
அப்போது எதிரில் குரோம்பேட்டை, நியூ காலனி, 13-வது தெருவைச் சேர்ந்த டாக்டர் பிரேம்சந்த் (35) என்பவர் அனகாபுத்தூர் கிளினிக்கில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். பாலத்தில் வேகமாக வந்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த இக்பாலின் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் எம்.ஐ.டி. மேம்பாலத்தில், 30 அடி உயரத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இக்பால் ஜி.எஸ்.டி. சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இக்பால் பரிதாபமாக உயிர் இழந்தார்.
டாக்டர் கைது
இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் காரை ஓட்டி வந்த டாக்டர் பிரேம்சந்தை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிகள்
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கூறுகையில், “வீட்டிற்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து வீதியை மீறி பாலத்தின் எதிர் திசையில் சென்றதால்தான் இக்பால் உயிரை பறி கொடுத்துள்ளார். அதே போல் டாக்டர் பிரேம்சந்த் குடிபோதையில் காரை ஓட்டிவந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாகும். எனவே வாகன ஓட்டிகள் எந்த நேரம் ஆனாலும் போக்குவரத்து வீதிகளை மதித்து செயல்பட வேண்டும்” என கூறினர்.