மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரம்: மத்திய மந்திரியிடம் விளக்கம் அளிப்பேன்

புதுவையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை விவகாரம் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கம் அளிப்பேன் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-31 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பிரிவில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் சென்டாக் மூலமாக தேர்வு செய்யப்படாத 95 மாணவர்களை இந்திய மருத்துவ கவுன்சில் விடுவிக்கக்கோரி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த 95 மாணவர்களில் சென்டாக் மூலமாக 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 6 பேர் குரூப் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 31 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து நான், டெல்லியில் நாளை (இன்று) மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன். மொத்தம் 95 மாணவர்களில் 49 பேர் சென்டாக் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 46 பேர் குறித்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மருத்துவ மேற்படிப்பில் இறுதி கலந்தாய்வுக்கு பிறகு தேசிய அளவில் 1,718 இடங்களும், புதுச்சேரியில் 166 இடங்களும் காலியாக இருந்தன. இந்த பட்டியலையும் கல்லூரி நிர்வாகத்திடம் நாங்கள் கொடுத்து விட்டோம். இதில் இருந்து ஒரு இடத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் 10 பேரில் ஒருவரை தனியார் கல்லூரிகள் தேர்வு செய்யலாம். எவ்வாறு தேர்வு செய்தனர் என்பதையும் கல்லூரி நிர்வாகம் தான் மத்திய அரசுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்துவதே சிறப்பு. அதனால் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும்போது நடத்தப்படும். நீட் வி‌ஷயத்தில் தமிழகத்திற்கு என்ன முடிவு எடுக்கப்படுகின்றதோ அதையே புதுச்சேரியிலும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரிகளை சந்தித்து நானும், முதல்–அமைச்சரும் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்