குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கடமலைக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-07-31 22:00 GMT

கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கரட்டுப்பட்டி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் வைகை ஆறு தண்ணீர் இன்றி வறண்டது. இதன் காரணமாக ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்ட உறை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன.

இதையடுத்து கடமலைக்குண்டு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் ஊராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றிய ஆணையர் சந்திரபோஸ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடமலைக்குண்டு கிராமத்தில் 3 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் சிலர் ஆணையர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கடமலைக்குண்டு பிள்ளையார் கோவில் திடலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை கடமலைக்குண்டு போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்