நாகர்கோவிலில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

நாகர்கோவிலில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2017-07-31 23:00 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12.15 மணி அளவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கேரளா பகுதியில் இருந்து ஒரு மினிவேன் அந்த வழியாக வந்தது. அப்போது கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக செல்வோர் அனைவரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

அங்கு வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போலீசாரையும் இந்த துர்நாற்றம் கடும் அவதிக்குள்ளாக்கியது. உடனே போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கோழி கழிவுகள் இருந்தது தெரியவந்தது. அதன் டிரைவரிடம் விசாரித்தபோது அவற்றை கேரளாவில் இருந்து ஏற்றி வந்ததும், அஞ்சுகிராமம் பகுதிக்கு அவற்றைக் கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, அந்த வாகனத்தையும், அதில் இருந்த டிரைவரையும் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோய் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் கோழிக்கழிவு ஏற்றி வந்த வாகனத்தின் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கழிவுகளுடன் கூடிய வாகனம் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் வகையில் கோழிக்கழிவுகளை ஏற்றிச்சென்ற மினி வேன் டிரைவர் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கோழிக்கழிவுகளை நகராட்சியிடம் ஒப்படைத்து, அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்